
தாகம் தணிக்க
அடைத்து வைத்த மாசு நீர்!
ஏழைகளுக்கு நிலமில்லை,
உழுதவனுக்கும் சொந்தமில்லை!
ஒற்றையறையில் காற்றடைத்து
குளிரூட்டி நிதமும் நித்திரை!
ஆகாயத்தை ஓட்டை போட்டு
அண்ணாந்து வேடிக்கை!
ஒற்றைக் குச்சியில் நெருப்படைத்து
புகைவழியே சுகம் தேடி
அலையும் மானிடா!
(ஐம்)பூதங்களையும் சித்திரவதை செய்ய
எப்போதிருந்து பழகினாய்?
பனிமலைஎல்லாம்
கரையும் நேரத்தில்
பனி உறைய வீட்டுக்கு வீடு
குளிர்சாதன பெட்டி!
மரக்காட்டை எரித்து
கான்கிரீட் தோட்டத்தில
துளசி விதைக்கிறாய்!
இயற்கையிலிருந்து விலகி நின்று
விசித்திரத்தை பழகி
பெட்டிதட்டினால்
எல்லாம் வரும் என்று
பகுத்தறிவு பேச
வெட்கமாயில்லை?
பக்கத்துவீட்டு எழவு
தெரியாமல்
வலை அரட்டை நண்பனின்
ஜலதோஷத்திற்காக
கண்ணீரா?

நடுச்சாலையில்
உயிர் துடிக்கும் நேரத்தில்,
வெறுப்பாய் ரத்தம் பார்த்து
செவி அடைத்து
அலுவலகம் போக
கைக்கடிகாரம் பார்க்கிறாயே,
நாளையே நீ துடிக்க
இன்னொருவன்
கடிகாரம் பார்ப்பானே!
உன்னால்,
மனிதனுக்கு சிரச்சேதம்!
இயற்கைக்கு உயிர்ச்சேதம்!
மரித்துப்போனமனிதத்திற்கு
பூச்செண்டு தர
மனதில் மனிதம் விதை,
விருட்சம்கொண்டே
பல விழுதுகள் தாங்கி
நாளைய உலகுக்கு
நீயே ஒரு நல்பாதை!