Oct 23, 2009

சிகப்பு விளக்கு

அந்த நடுநிசியில், ரொம்பவும் மங்களாய் எரிந்தபடி இருந்தது அந்த சிகப்பு விளக்கு. சொல்லப் போனால், சிகப்பு வெளுத்து மஞ்சளாய் மாறியிருந்தது. வாடிக்கையாளர்களும் வருவதும் போவதுமாய் இருந்து கொண்டே இருந்தது. உலகத்தில் எதற்கு வேண்டுமானாலும் கிராக்கி இல்லாமல் போகலாம். இதற்கு மட்டும் கிராக்கி குறைவதே இல்லை.

விளக்கின் கீழ் அமர்ந்திருந்தான் பாபு, பான்பராக் மென்று மென்று கடவாய் பற்களில் இரண்டை இழந்திருந்தான். கீழ் உதட்டில் புண் ஆகியிருந்தது. தூக்கம் வரவே ஒரு பான்பராக்கை பிரித்து அப்படியே கொட்டிக்கொண்டான். கீழ் உதட்டின் உட்புறம் நெருப்பாய் எரிவது அவனுக்கு ஒன்றும் புதிதில்லை.


வேகமாய் வந்தார்கள் சுரேசும், வேலுவும்.

“ஒருத்தர் மட்டும்தான்” பாபு.

சுரேஸ் தங்கவேலுவை பார்க்க, முதலில் போன சுரேசை தடுத்து ”மொதல்ல காசை வை, அப்பால உள்ளாற போ” என்றான் பாபு.

யோசிக்காமல் காசை பாபுவிடன் கொடுத்துவிட்டு உள்ளே போனான் சுரேஸ்.

பத்து நிமிடம் கழித்து, பேண்ட் ஜிப்பை போட்டவாறே வெளியே வந்தான். வியர்த்திருந்தான், களைத்துமிருந்தான். பெல்ட்டை இறுக்கிப்போட்டுக்கொண்டான். தலையை கையால் கோதிவிட்டான். வேலு பாதி அடித்துமுடித்திருந்த வில்ஸ் பில்டரை வாங்கி நன்றாக இழுத்த்த்து கண்மூடி மேல்நோக்கி புகைவிட்டான். ஏதோ ஜென்ம சாபல்யம் அடந்த மாதிரி அவன் முகத்தில் பேரானந்தம். வியர்வையை சட்டையால் துடைத்துக்கொண்டான்.

“என்னடா போலாமா?” சுரேசிடம் கேட்டான் வேலு.

”நீ போவல?” பாபு.

”இல்லே” வேலு.

இருவரும் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வேறு கதை பேசி நடக்கலானார்கள்.

என்ன ஆகியதோ தெரியவில்லை. மஞ்சளாய் எரிந்த பல்பும் அணைந்தது. . கீழுதடு எரிய &%&^%&$^&^$%^& எனத் திட்டியபடி இன்னொரு பான்பராக்கை பிரித்து போட்டுக்கொண்டான் மாநகராட்சி கழிவறை குத்தகைக்காரன் பாபு.