உறவுகள்-தேன்கூடு-நட்பு
கல்லூரி ஆரம்பிக்க இருந்த முந்திய நாள்,
எனக்கு ஒதுக்கப்பட்ட விடுதி சென்ற போதுதான்
அவனைப்பார்த்தேன்.
என் அறை நண்பன் என்ற
முறையில் ஹாய் சொன்னதோடு
எங்கள் அறிமுகம் முடிந்து தூங்கிப்போனேன்.
மூத்தோருக்கு சல்யூட் அடித்த
அந்தக் கல்லூரியின் முதல்நாளில்தான்,
எந்த பிரிவு என மூத்தோர் கேட்க,
பதில், என்னுடைய பிரிவாக இருக்கையில்
மனதுள் ஒரு சந்தோசம்.
ஆக, இருவரும் ஒன்றாக மூத்தோருக்கு
மரியாதை செலுத்தி விட்டு
கடைசி வரிசையில் ஒன்றாக அமர்ந்தோம்.
அன்றுதான் எங்களை நெருக்கியது நட்பு!
பிறகு என்னிடம் இருந்து
சிகரெட் பழக்கத்தையும்,
இருவருமே தண்ணி பழக்கத்தையும்
பழகியது வெகு சீக்கிரம்.
ஒரே தட்டில் சாப்பாடு,
இருவருக்கும் பொதுவானது
சட்டை, ஷூக்கள், ஒரே சிகரெட்,
ஒன்றாக சைட் என
முதல் செமஸ்டர் முடியும் முன்னே.
இன்னும் இருகியது எங்கள் நட்பு!
இணைபிரியா நண்பர்கள் என்று
நம்மை எல்லோரும் சொன்ன போது
காலர் தூக்கிவிட்ட படி,
நாம் விட்ட சிகரெட் புகைக்குக்கூட
ஒரு கர்வம்.
இரண்டாம் ஆண்டில்,
அப்பாக்களிடம் கெஞ்சி பணம் வாங்கி
பொதுவாக ஒரு பைக் வாங்கியதும்,
பல நேரங்களில் பெட்ரோலுக்கு பெண்களிடம்
அல்லு போட்டு ஊர் சுத்தியதும்,
குரங்கு அருவிக்கு போய்
திரும்பி வருகையில் பெட்ரோல் தீர்ந்து
விடுதி வரைக்கும்,
வண்டி தள்ளியே வேர்வையில்
மறுபடியும் குளித்துவிட்டு,
சிரித்த படி உறங்கிய போது
உடல் வலி மேலிட,
மனதுள் ஒரு திருப்தி.
விடுமுறையில்
உன் வீட்டுக்கு நான் வந்தேன்,
உன் அத்தைப்பெண்ணை
எனக்கு அறிமுகப்படுத்தி
நீ வெட்கப்பட்டாய்
"உனக்கு இதெல்லாம் கூட தெரியுமாட நண்பா"
அப்படின்னு கிண்டலடிச்சு
"நல்லா இருங்க"ன்னு சொல்லி
ஒரு சிவாஜி கணக்கா வாழ்த்தினேன்.
டீ சாப்பிட
வண்டிய எடுத்துக்கிட்டு
ஊட்டிக்கு ஓவர் ஸ்பீடுல போய்
போலீஸ் மாமாகிட்டா மாட்டினது
யாருக்குமே இன்னும் தெரியாது.
ஆச்சு 4 வருசம்,
அரியர் இல்லாம தப்பிச்சுட்டு,
இண்டஸ்ட்ரியல் விசிட்டுக்கு
வீடே இல்லாத ஒரு காட்டுக்கு
போனது நாம் தான்.
கல்லூரியின் கடைசி நாள்,
எல்லார் கண்களிலும் கண்ணீர்,
அவனையும் என்னையும் தவிர.
"எங்கேடா நண்பா போயிருவா,
ஒரு பீர் அடிச்சுட்டு ராத்திரி கோவில்பட்டியில
பஸ் ஏறினா காலையில உன்னோட ஈரோட்டில்
ஒன்னா தம் அடிக்கப்போறேன்"
அப்படின்னு என்னைத்தேற்றிவனே
அவன் தான்.
பிறகு கணினி படிக்க
அவன் சென்னை போனதும்,
எனக்கு அவ்வளவு வசதியில்லாம
ஈரோட்டிலேயே படித்தேன்,
ஆனாலும் ஒரே கோர்ஸ்.
எப்படியோ அடிச்சு புடிச்சு
பெங்களூர்ல நீ
நல்ல வேலை வாங்கிட்ட,
ஈரோட்டுல,
சொற்ப சம்பளத்துல
நானும்தான்.
எத்தனையோ தடைவ
நீ என்னை
"பெங்களூருக்கே வந்துருடா" அப்படின்னு
கெஞ்சிய போதும்
"தோட்டத்த பார்த்துக்கனும் நண்பா"
அப்படின்னு சொல்லி
தட்டி கழிச்சுட்டே வந்தேன்.
வேலைப்பளு காரணமா
கொஞ்சம் கொஞ்சமா
பிடி தளர்ந்துகிட்டே போனது
நமது நட்பு.
நீ அமெரிக்கா போனது கூட
அங்கிருந்து நீ போட்ட
மின்னஞ்சல் மூலம்தான்
தெரிய வந்தது.
கொஞ்ச காலம்,
நம்மை மறந்து ஓடிப்போனது.
நாமும் வாழ்க்கையின் சீற்றத்தில்
காலத்தினையும் மறந்து போனோம்.
நானும் டில்லியில்
நல்ல வேலையில் சேர்ந்து,
குடும்பதோட
அங்கே போனபோதுகூட
உன்னை மறக்கவே இல்லைடா.
ஒரு 2வாரம் கழிச்சு
நான் உனக்கு போட்ட
மின்னஞ்சலுக்கு பதிலே வரலை.
அப்படியே மறந்தும்,
வேலையினால் மரத்தும் போனேன்.
சில மாசம் கழிச்சு
சென்னைக்கு வந்த போது
உனக்கு போட்ட மின்னஞ்சல்,
டிஸ்க் கோட்டா ஓவர்ன்னு
எனக்கே திரும்பி வந்துச்சு.
வீட்டுக்கு போன் பண்ணி
உன்னோட தொலைபேசி
எண்ணை வாங்கி வெச்சுகிட்டு,
ISDன்னா நெறையா ஆகுமேன்னு
நினைச்சு அடுத்த மாசம் சம்பளம்
வாங்கி பேசிக்குவோம்ன்னு விட்டுட்டேன்.
இப்படியே ஒரு 2 வருசம்
சம்பளம் வாங்கிட்டேன்.
அதுக்கும் ஒரு நாள்
முடிவு வந்துச்சு.
என்னோட அலுவலகத்துலயே
எனக்கு ISD வசதியோட
தொலைபேசி தர,
நண்பனுக்குதான் முதல்ல கூப்பிட்டேன்.
இந்த எண் விளங்காம போயிருச்சுன்னு
ஒரு வெள்ளக்காரமா சொன்னப்பதான்
நம் நட்பின் தூரம்
தெரிய ஆரம்பிச்சது.
நான் ஈரோடு வீட்டுக்கு போனபோதுதான்
உன்னோட
கல்யாணப் பத்திரிக்கையைப் பார்த்தேன்.
ஒரு வருசம் முன்னாடியே ஆன
கல்யாணத்துக்கு என்னன்னு
வாழ்த்து சொல்ல? எப்படியோ
உங்க வீட்டுக்கு போன் போட்டு
உன்னோட செல் போன் நம்பர் வாங்கி
பார்த்தா சென்னையிலேயே
இருந்து இருக்க 3 வருசமா.
பல வருசம் கழிச்சு
நான் கூப்பிட்ட முதல் போன்கால்
"என்னை கண்டுபுடின்னு" நான் சொல்ல,
நீ என் குரல் மறந்து
"எங்கையோ கேட்ட குரல் மாதிரி இருக்கே"
அப்படின்னு சொன்ன போது
நமது நட்புக்குள்
ஒரு பெரிய இடைவெளி தெரிஞ்சுது.
எதேச்சையாக,
டிராபிக் சிக்னலில் ஹாய் சொல்லும்போதும்,
தியேட்டரில அசந்தர்ப்பமாக பார்த்து
படம் ஆரம்பிச்சுருமுன்னு அவசரத்துல
"எப்படிடா இருக்கேன்னு" கேட்கும் போதும்,
யாஹூ அட்ரஸ் புக்கில
உன்னோட பிறந்து நாள்
ரிமைண்டர் வரும்போதும்,
இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது நம்முடைய நட்பு.
------------------------------------------------------------
இளவஞ்சி/நிலா, வாக்களித்து மீண்டும் எனக்கு ஆறுதல கிடைக்கச் செய்த அனைவருக்கும் என் இதயபூர்வமான நன்றிங்க!