Jul 17, 2007

அப்பா!


நான் நடை பழகும் போது
பல முறை விழுந்து இருக்கிறேன்.
அன்றெல்லாம் என் கால்களுக்கு
உங்கள் கரம் கொண்டு பலம் கொடுத்து
பெருமிதப் பட்டவரே நீங்கள்தான்,
இன்று நெடுந்தொலவில்,
சொந்த காலில் நிற்கும்போதோ
"வேண்டாம் ராஜா!
வந்துருடா, பார்க்காமல் இருக்க முடியல"
என்று தொலைபேசியில் கதறும் போது
என் கால்கள் பலமிழக்கின்றன அப்பா!


தந்தையின் பிறந்த நாளில் கண்ணீரோடு விவசாயி

Jul 11, 2007

பிரிவும் பிரிவின் நிமித்தமும்...

என்னை விட்டு பல நாள் நீ
விலகியிருக்க, தற்காலிகமேயன
அழுதவாறு என்னைத்
தேற்றியது மனம்!
பலநாள் மனம்வென்றது,
இம்முறையும் அதையே சொல்லியது,

ஆனாலும் மெளனமாய்
உள்ளுக்குள் அழுதபடியே!



தினம் ஒரு வதம் செய்கிறேன்
நாட்காட்டியை,
நல்ல காலம் வருமென
ஆறுதல் சொன்னபடி அதுவும் ஆயத்தமாகிறது
அடுத்த வதத்திற்கு!



இருவரிலும் ஜீவனில்லை
எனத் தெரிந்தும்
மண்ணில் தெரித்து சிதறி
என்னைப் பார்த்து ஏளனம் செய்கிறது
தோட்டத்துப் பூக்கள்!


இருமுறை முற்றத்திற்கு வந்து
விசாரித்து விட்டுப் போனது முழுநிலவு,
என் தாடி கண்டதும் சோகம் மறைத்தது,
மேகம் மூடி.


உனக்காகவே
கை கோர்த்து காத்திருக்கிறோம்
நிதமும் புதிதாய்!
நானும், நிலவும்
என் தோட்டத்து பூக்களும்!