Dec 11, 2009

முண்டாசுக் கவி

பல வருடமாச்சு எங்க தேசம் உனை மறந்து!
ஆச்சர்யம் ஒன்றுமில்லை
நீ என்ன கட்சியா
ஆரம்பித்தாய்?

பேசினாய் எழுதினாய்,
கரடியாய் கத்தினாய்,
தமிழென்றாய், சுதந்திரமென்றாய்,
சமஉரிமை என்றாய், ஜாதியும் இல்லையென்றாய்,
எவனுக்கு வேணும் உன் வார்த்தை,
இடுப்பு மச்சம் தெரியுதாம்
கிளம்புகிறோம் வெண்திரைக்கு.





உனக்கும் ஜாதிமுலாம் பூசிவிட்டோம்
மறைத்துக்கொள் உன் முகத்தை,
முண்டாசு எதற்கு இருக்கிறது?
அன்பென்றால் கொட்டுவது முரசில்லை பைத்தியக்காரா,
தலைமேலே இடியே விழுகிறது.

உனக்கு இன்று பிறந்தநாளாமே
யாருக்குத் தெரியும்
எதற்கு தெரிய வேண்டும்?
தெரிந்துதான் என்ன ஆகப் போகிறது?
வாக்களித்தால் காசு கிடைக்கும்,
உனை வாழ்த்தினால் ஒரு சிங்கிள் டீ கிடைக்குமா?

அடைபட்டு போனோம் சிறுவட்டத்தில்
வேண்டாம் உனது கவிதைகள்
மனம் பிறழ்ந்தவர்கள் படிப்பார்கள், மகிழ்வார்கள்.
நாங்களெல்லாம் தினக்கூலிகள்,
மாரடித்தே பழக்கப்பட்டுவிட்டோம்.

உனது படைப்புகள் எல்லாம் வரலாற்றுப்
புத்தகத்தில் வருமென காத்திருப்பவர்கள்.
மனமேற்றி வாந்தியெடுத்தால் ஐந்து மதிப்பெண்ணுக்கு
மட்டுமே யோக்கியப்படும் உனது படைப்புகள்.

பாரதத்தில் பிறந்தாய்,
பாரதியாய் வாழ்ந்தாய்,
பாராமுகமாய் இருக்கிறாய்,
பத்திரமாய் மறக்கப்படுவாய்!

வாழ்க தமிழனும், தமிழும்!

Pic : Thanks http://www.flickr.com/photos/balu/