களை கட்டி இருந்தது என் அலுவலகம்.
இளம்விதவை ஒருவருக்கு புதுப்பதவியாம்,
கண்களில் இச்சையும், மனதினில் காமத்தையும்
ஒருங்கேற்றி வாசனையோடு ஆண்கள் கூட்டம்.
விட்டு விலகி வாசல் வந்தேன், கைபோனில்
நண்பனுடன் உரையாடுகையில் கடந்து போனது
சோகம் கண்ட ஒரு உருவம்,
தோன்றவில்லை திரும்பிப்பார்க்க.
அதிகாரி அறிமுகப்படுத்துகையில் கண்டேன் அவளை,
கருவளையம் கொண்ட ஒளி இழந்த கண்கள்,
பரிதாபமோ, பச்சாதாபமோ ஒன்றும் தோன்றவில்லை.
புன்னகையுடன் விலகினேன்,
புருவம் தூக்கி என் முதுகை முறைத்துவிட்டு போனாள்.
உள் நோக்கம் கொண்ட வக்கிரத்தால்
ஆண்களை வெறுத்திருந்தாள்.
கண்டும் காணாமல் அவளிடமிருந்து
ஒதுங்கியதால் என்னை ஸ்நேகித்திருந்தால்.
ஒரு நாள் பேசியது மடந்தை,
தாலி கட்டிய ஒரு மணியில்
கணவனை,
பெற்றோரை இழந்து துர்பாக்கியவதியானவள்.
சமுதாயம் ஒதுக்க,
ஏச்சுக்கும் பேச்சுக்கும் இடையில்,
பாரதி கண்ட பெண்ணாய்,
எரித்துவிட்டு வந்திருந்தாள், தூற்றியவர்களை.
விடுதி ஒன்றில் வாசம்,
வயிற்று பிழைப்புக்காக அலுவலகம்,
இரவு தனிமையைத் தணிக்க,
வடியாக் கண்ணீர்!
தனியே மூலையில் கதறும் இதயம்,
அது மூன்றாமவருக்கு தெரியக்கூடாதென்ற கர்வம்!
இவைதான் அவள்!
முதன் முதலில் கண்ணீர் கண்டது என் இதயம்,
மாற்றத்திற்காக அந்த ஞாயிறு
வெளியே சென்றுவர ஒப்பந்தமாகியது.
கூடும் இடம் ஒரு ஐஸ்கிரீம் கடை என்றும் முடிவாகியது.
மாற்றம் அவளிடத்தா? என்னிடத்தா?
"வெத்துப்பேச்சு" என்றடக்கினேன் மனதை.
ஞாயிறு, நல்ல தூங்கிகிட்டு இருக்கேன். ஒரு மிஸ்ட் கால் என் மொபைல் போனில். என்னோட வாழ்க்கையில் வந்த முதல் மிஸ்ட்கால், அட யாருடா நமக்கு மிஸ்டு தரதுன்னு எடுத்துப்பார்த்தா அவளேதான்? ஏன்? அடப்பாவி 9:30 க்கு அவளோட வெளியே போறேன்னு சொல்லிட்டு 10 மணி வரைக்கு தூங்கிக்கிட்டு இருந்தா போன் பண்ண மாட்டாங்களா? அப்ப கூட இந்த பொண்ணுங்க மிஸ்ட் கால்தான் தருவாங்களா? சச்சின் படத்துல சந்தானம் சொன்னது அசை போட்டு முடிக்கிறதுக்குள்ள என் வண்டியை ஐஸ்கிரீம் கடை முன் நிறுத்தியிருந்தேன்.
பேருந்து கூட்ட நெரிசலில் அவள்,
கசங்கியது என் மனம்.
வார்த்தைகள் இடம் மாறியது,
கண்டேன் அவளுள் இருந்த வேறோருத்தியை,
அவள் சிரித்து அப்போதுதான் பார்த்தேன்.
அவள் விழுங்கிகொண்டே இருக்க,
கரைந்துவிட்டு இருந்தது
எனக்கான ஐஸ்கிரீமும், என் பர்ஸும்.
வெளியே வந்தபோது என்மனதும்.
கடற்கரை,
மனம் முழுக்க புழுக்கத்துடன் மக்கள்,
கடல் நீரில் கால் நனைத்து விளையாடியது மடந்தை,
பிறகு, கரைமணல் நனைய கண்ணீர் விட்டழுதது,
ஒரு குழந்தையாய், ஒரு விதவையாய் இரு முகம்.
பட்டாணி, சுண்டல், சோன்பப்டி,
துப்பாக்கி எதையும் விடவில்லை அவள்,
எனக்குள் ஐயம்,
வாழ்வில் கடைசிநாளா அவளுக்கு?
சாலையில் குழிகள்,
திறமையான என் ஓட்டுனம்,
"இவன் நல்லவன், பெண்களை மதிக்கிறவன்"
சொல்லியது அவள் மனம்.
விடுதி விட்டு திரும்பிவருகயில்,
பிரிவின் துயரம்,
என் வாகனத்திற்கு.
மனம் முழுக்க அவள் நினைவுடன்,
உறக்கமில்லா ஒர் இரவு,
சம்மதம் சொல்வாளா அந்த வெண்புறா?
கையில் தொலைபேசி அழைத்து கேட்டுவிடலாமா?
நம்பர் போட்டு பலமுறை வைத்தாயிற்று,
இப்படியே காலை வரை..
விடியல் வர, வண்டியுடன் அவள் விடுதி பறந்தேன்
முன்னமே போய்கொண்டிருந்தாள்,
அவள் முன் என் வண்டி நிற்க,
குழப்பதுடன் என் முகம்,
குறும்புடன் அவள் "கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா?" என்றாள்.
"வாழ்க்கைக்குமா?" என்றேன் மனதில் கொண்ட தைரியத்துடன்.
ஒரு நிமிட நிசப்தம்,
தவறுக்காக குறுகுறுத்தது என் மனது,
"சே, தப்பு பண்ணிட்டியேடா"
இது என் மனம்.
"இந்த நிலைமையில் எனக்கு தேவையா இது?"
இது அவள் மனம்.
அருகிலிருந்த மரத்தின் சருகு சரசரத்தது,
இருவரின் கண்களும் புவி நோக்கி,
வறண்ட தொண்டை,
தடதடத்த கைகளுடன் நான்.
புன்முறுவலுடன் பின்னமர்ந்தாள்,
மெதுவாக நகர ஆரம்பித்தது எங்கள்
"வாழ்க்கை வண்டி"